tnpsc-logo2016-17ஆம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டி,என்,பி,எஸ்,சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் குரூப் – 4 தேர்வு மூலமாக நிரப்பப்படும். அந்த வகையில், வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 3-வது வாரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் இந்த அறிவிப்பு வெளியாகாததால் குரூப்-4 தேர்வுக்காக தயாராகி வரும் தேர்வர்கள் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து டி,என்,பி,எஸ்,சி செயலாளர் எம்.விஜய குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஏறத்தாழ 5,000 காலி இடங்கள் குரூப் – 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

குரூப் – 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் என பல்வேறு விதமான பதவிகள் நிரப்பப்படுகின்றன. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் குரூப் – 4 தேர்வு எழுதலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி வகுப்பினருக்கு வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான எஸ்எஸ்எல்சி படிப்புக்கு மேல் அதாவது பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை படித்திருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு எதுவும் கிடையாது.

English Summary: TNPSC Group – 4 When the Exam is conducted