aadharcard

மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு, மற்றும் செல்போன் எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் இந்த பணி தொடங்கப்படும் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) பொதுமக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விவரங்களின் அடிப்படையில்தான் தமிழகத்தில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. என்பிஆர் பதிவேட்டு தகவல் தொகுப்புகளை மாநிலம் முழுவதும் சரி செய்யும் பணியை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கியது.

இது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியபோது, “என்பிஆர் பதிவேட்டு தகவல்களை தற்போதுள்ளபடி சரி செய்யும் பணிகள், தற்போது திண்டுக்கல், திருப்பூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன. என்பிஆர் விவரங்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த பிரதிகளைக் கொண்டே, தகவல்களை சரி செய்யும் பணிகளை கணக்கெடுப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்களை பிரதி எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களில் பிரதிகள் கிடைத்தவுடன் தகவல் களை சரி செய்யும் பணிகள் தொடங்கிவிடும். சென்னையில் ஏற்கனவே இந்த பணிகள் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பணி தொடங்கிய நாளில் இருந்து 20 நாட்களுக்குள் பணிகளை முடிக்க கணக்கெடுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் 300 குடும்பங்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பாளர் கொண்டு வரும் என்பிஆர் பதிவேட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா? இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா? பிறந்த குழந்தை மற்றும் குடும்பத்தில் புதிதாக வந்தவர்கள் என புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனரா? என உறுதி செய்ய வேண்டும்.

புதிதாக குடியேறிய குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள், விடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் விவரங்களைக் கணக்கெடுப்பாளரிடம் கொடுத்து, என்பிஆர் பதிவேட்டில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். கணக்கெடுப்பாளரிடம் ஆதார் எண் அல்லது அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், ஒவ்வொருவரின் கைபேசி எண் (இருந்தால்) ஆகியவற்றை வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இவ்வாறு என்பிஆர் பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்று சேரும். அரசின் பண விரயம் தவிர்க்கப் படும். மேலும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வழங் கும்போது, போலி ரேஷன் கார்டுகள் ஒழியும் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

English Summary: To began Aadhaar and Ration card Number to link with the Population Registry.