சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 503 பிரதான பூங்காக்கள் மற்றும் 166 சாலையோர பூங்காக்கள் ஆகியவை அழகுடன் பராமரித்து வருவதோடு தினமும் தண்ணீர் விடப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருவதால் பூங்காக்கள் பசுமையாக காணப்படுகிறது. இதனால் பொது மக்கள், சிறுவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பிரதான பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் முதியவர்கள் அதிகளவு பூங்காக்களை பயன்படுத்துகின்றனர். பூங்காக்கள் பசுமையாக இருப்பதால் திரைப்படம், தொலைக்காட்சி படப்பிடிப்பு போன்றவையும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பூங்காக்களை பராமரித்து நிர்வகிப்பதற்கு மாநகராட்சிக்கு பெருமளவு செலவு ஏற்படுவதால் பூங்காக்களை தத்து கொடுக்கும் புதிய முயற்சியை மேயர் சைதை துரைசாமி மேற் கொண்டுள்ளார். தனியார் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், போன்றவைகளோ, தனிநபர்களோ தத்து எடுத்து பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி 503 பிரதான பூங்காக்களும், 166 சாலையோர பூங்காக்களும் தனியார் யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம் 100 சதுர மீட்டர் வீதம் இதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த தொகையினை மாநகராட்சிக்கு டெபாசிட்டாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை அதனை பராமரிக்க வேண்டும். பராமரிப்பு செலவினை தனியார் ஏற்றுக் கொள்வதால் அவர்கள் தங்களது தொழில் சார்ந்த விளம்பரங்களை அதில் வைத்து கொள்ளலாம்.
இது வரையில் மாநகராட்சி பராமரித்து வந்த இந்த பூங்காக்கள் இனி தனியாரிடம் வழங்கப்படுகிறது. அவர்கள் பூங்காக்களை தினமும் அழகுபடுத்தி பராமரித்து கொள்ள வேண்டும். பூங்காவிற்காக இனி மாநகராட்சி எந்த செலவையும் மேற்கொள்ள தேவையில்லை. பூங்காக்களை தத்து எடுக்க விரும்புபவர்கள் மாநகராட்சியை அணுகலாம்.
அதேபோல் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சாலை மைய தடுப்பு பகுதியிலும் மின் விளக்கு கம்பங்களிலும் விளம்பரம் செய்து கொள்ள அனுமதிக்கவும் மாநாகராட்சி ஆலோசனை செய்து வருகிறது. சென்னையில் 3 லட்சத்து 30 ஆயிரம் மின் விளக்கு கம்பங்கள் உள்ளன. இவற்றில் தனியார் விளம்பரங்கள் நிறுவ அனுமதிக்கப்பட்டால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள 129 டிராபிக் ஐ லேண்ட் என்று கூறப்படும் போக்குவரத்து தீவுகள் பகுதியையும் தனியாருக்கு தத்து கொடுப்பதன் மூலம் மாநகராட்சியின் வருமானம் பெருக வாய்ப்பு உள்ளது. ரவுண்டானாக்கள் அழகுபெறவும் வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தினையும் தனியார் பங்களிப்புடன் செய்ய மாநகராட்சி ஆலோசிக்கிறது.
English Summary : To the private ownership parks. Advertise on electric poles. Chennai Corporation Plan