தஞ்சாவூர்: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்தது. கஜா புயல் பாதிப்புகள் சரியாகும் முன் பெய்த மழை காரணமாக மக்கள் பெரிய இன்னல்களுக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தது. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் டெல்டாவில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், முத்துப்பேட்டை. மயிலாடுதுறை, மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.