சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது டெல்டா மாவட்டங்கள்தான். கஜா புயல் கடந்தும்கூட அந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை காரணமாக நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் இடைஞ்சல் ஆகிவிடுகிறது.
தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள தாழ்வு பகுதியினால் சென்னையில் நேற்றே மழை ஆரம்பித்து விட்டது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் வடபழனி, அசோக் நகர், கோயம்பேடு, தாம்பரம், பெருங்குடி, வில்லிவாக்கம், உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. கூடவே பலமான காற்றும் அடித்தது. ஆனால் இன்றைக்கு கூட நல்ல மழை பெய்யும் என சொல்லப்படுகிறது.
கரையை கடந்தது அடுத்த புயல்?: இதற்கு காரணம் வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான். கஜா புயல் 15-ம் தேதி இரவு கரையை கடந்த உடனேயே அடுத்த புயல் வரப்போகிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்திருந்தது. அதன்படியே தென்மேற்கு வங்கக்கடல் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
தாழ்வு மண்டலம் புயல் கிடையாது: இது இன்னும் 24 மணி நேரத்துக்கு அதே இடத்தில்தான் இருக்குமாம். பிறகு நாளைதான் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமாம். ஆனால் இது புயலாக மாற வாய்ப்பில்லையாம். காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில், கரையை கடந்து செல்லும்போது, தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்.
மீனவர்கள் 10 மாவட்டங்கள்: குறிப்பாக தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு பெரும்பாலும் மழைதான். எனவே தென்மேற்கு வங்ககடல் பகுதியில் இன்று யாரும் மீன்பிடிக்க போக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.
கொட்ட போகிறது பாதுகாப்பு அவசியம்: புயல் வரப்போவதில்லை என்று சொல்லி விட்டாலும், இரு மாநிலங்களிலும் பேய் மழை கொட்ட போகிறது என்று அறிவித்து விட்டதால் இரு மாநில மக்களும் அதற்கு தயாராக இருந்து பாதுகாப்போடு எதிர்கொள்வது அவசியமாகிறது.