புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்தத் திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் மஹா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
எல்லாப் பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹா பிரதோஷம்” என்று வழங்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்.
வழிபாடு: பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனைத் தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்குச் சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம்.
சனி மஹாபிரதோஷம்: நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பைத் தரும். மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது ஆகும்.
சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தியெம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.