இளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் அப்துல்கலாம். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் மிக உயரிய பொறுப்பான குடியரசுத் தலைவர் என்ற அரியணையில் அமர்ந்தவர். அத்தோடு மக்களின் குடியரசுத் தலைவர் என்று சொல்லும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் எப்போதும் மக்களை பெரிய அளவில் பேச வைத்தன.
எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவியல் விஞ்ஞானி என அவர் ஜொலிக்காத இடங்களே இல்லை.. அறிவில், அறிவியலில் யாரும் எட்டமுடியாத உயரத்தில் அவர் இருந்தாலும் எல்லோரிடமும் எளிமையாக அன்பாக பழகக்கூடியவர். குறிப்பாக குழந்தைகள் மீது தனிப்பிரியம் வைத்திருந்தார். அவர்களை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளும் அப்துல் கலாமை அதிகம் நேசித்தார்கள். அப்துல்கலாம் சொன்ன ஒவ்வொரு வாக்கியமும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. ‘முயற்சிகள் தவறலாம்.. ஆனால் முயற்சிக்க தவறாதே’.. ‘ஒரு முறை வந்தால் கனவு.. இருமுறை வந்தால் அது ஆசை.. பலமுறை வந்தால் அது லட்சியம்’ என இளைஞர்களிடம் உறங்கிக் கிடக்கும் புது நம்பிக்கையை தட்டி எழுப்பியவர். அப்படிப்பட்ட அப்துல் கலாம் தனது 83-வது வயதில் அதாவது கடந்த 2015-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அவர் இம்மண்னை விட்டு மறந்தாலும் அவரின் புகழ் இம்மண்ணை விட்டு மறையப்போவதில்லை. என்றென்றும் நிலைத்திருக்கும். அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.