முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடலளவில் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் தேற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்., 1ல், உலக முதியோர் தினம் கடைபிடிக்கப் படுகிறது. ‘முதியோரை கொண்டாடுங்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இன்றைய விரைவான உலகில் குடும்ப உறவுகள் என்பது முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை பாதுகாக்க அவரவர் பிள்ளைகள் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
முதியோர் குழந்தைகளுக்கு சமம் என கூறுவர். 60 வயதினை கடந்தவர்கள் முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர்களின் செயல்பாடுகள் மாறிவிடும். முதியோர்களின் அறிவு மற்றும் வழிகாட்டி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். குடும்பத்தில் முதியோரை அரவணைத்து செல்லுங்கள். நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது கவனிக்க முன்வர வேண்டும்
பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்நிலை மாறவேண்டும்.
70 உலகில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உள்ளது. இது 2050க்குள் 200 கோடியாக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. 20 இந்தியாவில் 2011 சென்செஸ் படி, மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர். இது 2026ல் 12.5 சதவீதமாகவும், 2050ல் 20 சதவீதமாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.