சென்னை மாநகராட்சியில் 5 சதவீத தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சுமார் 12 லட்சம் சொத்துஉரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்துஆண்டுதோறும் ரூ.1,700 கோடியை சொத்து வரியாக மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்.31-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அரையாண்டில் மொத்தம் ரூ.850 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், 5 சதவீத தள்ளுபடியுடன் அக்.31-ம் தேதிக்குள் ரூ.500 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், கடந்த மாதம் தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் ரூ.290 கோடியே 61 லட்சம் மட்டுமே சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை இன்றைக்குள் (அக்.31)செலுத்தி, 5 சதவீத தள்ளுபடி சலுகையை பெறுமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வரி செலுத்தாவர்களிடம், புதிய தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டவிதிகளின்படி, சொத்துகளை ஜப்திசெய்தல், அபராத வட்டி விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.