சாலை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் 11 தொழிற்சங்கத்தினர் கூட்டாக வேலை நிறுத்ததத்தில் ஈடுபட பல்வேறு தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்ததை அடுத்து இன்று ஒருநாள் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் இயங்காது என்று அந்தந்த தொழிற்சங்கத்தினர் முடிவு செய்து அறிவித்துள்ளனர். ஆனாலும் இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளனர். இதனால் அந்த தொழிற்சங்கத்தினர் மட்டும் இன்று வழக்கம் போல பணிக்கு சென்று பேருந்துகளை இயக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கத்தினரும் மத்திய அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ள நிலையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் போலீசாரும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்கான முன்னேற்பாடுகளை போலீசார் ஏற்கனவே தொடங்கி விட்டனர். வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் போன்ற சமூக விரோத செயல்களில் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பஸ் டெப்போக்கள் முன்பு இன்று காலையில் இருந்தே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை மாநகரம் முழுவதிலுமே, முக்கிய சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. எந்த வித பிரச்சனைகளுமின்றி பஸ் போக்குவரத்து நடைபெறுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் மட்டும் இன்று 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தமிழக அரசு ஊழியர்கள் சங்கமும் பங்கேற்கிறது. காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் இன்று நாடெங்கும் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இன்று காசோலை பரிவர்த்தனை நடைபெறாது என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தனியார் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது என்று 12 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எனவே இன்று சென்னையில் 90 சதவீத ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிய வந்துள்ளது. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் இன்று காலை சென்னை சென்ட்ரல், பல்லவன் சாலை, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

English Summary : Security was improved today due to nationwide strike by trade unionists.