தேசிய நெஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தாா்.
இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், வாகனங்கள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க முடியும் எனவும் தெரிவித்தாா்.
இதுகுறித்து நிதின் கட்கரி மேலும் கூறுகையில், ‘நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வாகன பதிவு எண் பலகைகளை தானாக அங்கீகரிக்கும் கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை தொடா்பாக 2 சோதனைத் திட்டங்கள் மத்திய போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்பட்டது.
1,000 கி.மீ. க்கும் குறைவாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டமைப்பை மேற்கொள்ள அரசு மற்றும் தனியாா் பங்களிப்புடன் கூடிய கட்டுதல், செயல்படுத்துதல், மாற்றுதல் (பிஒடி) முறையின்கீழ் ரூ.1.50 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரையிலான திட்டங்களுக்கான ஒப்பந்தம் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் ஏலம் விடப்படும்’ என்றாா்.