தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சாலைகளின் தன்மைக்கு ஏற்றவாறு 7 முதல் 10 சதவீதம் வரையில் கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர், ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 15 சுங்கச்சாவடிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கசாவடிகளுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 7 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 1997-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்திலும், 2008-ம் ஆண்டு டிசம்பர் ஒப்பந்தத்தின்படி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், பாலைபுத்தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, வாகைகுளம், ஆத்தூர், பட்டறை பெரும்புதூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சாலைகளின் தூரம், வசதிகளுக்கு ஏற்றவாறு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் கூறும்போது, ‘‘நெடுஞ்சாலைகளை பராமரிக்க ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 7 சுங்கச்சாவடிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. நெடுஞ்சாலைகளின் விதிப்படி, சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. குடிநீர், கழிப்பறை, போதிய அளவில் சர்வீஸ் சாலைகள், மின்விளக்குகள் இல்லாமல் இருக்கின்றன. இதனால், நாங்கள் அவதிப்படுகிறோம். ஆனால், ஆண்டுதோறும் கட்டணம் மட்டும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது’’ என்றார்.

English Summary: Toll rates to go up at 21 plazas across TN from April 1st.