நாடு முழுவதும் காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. அதிலும், பல மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டாலும், சில இடங்களில் கிலோ ரூ.200 வரை எட்டியுள்ளது.
தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தக்காளி விலை, கடந்த வாரத்திலிருந்து ஏறுமுகத்துடனேயே இருந்து வருகிறது. சென்னையின் முக்கிய காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு சந்தைக்கு தினசரி சராசரியாக 60 முதல் 65 லாரிகளில் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.ஆனால், விளைச்சல் அதிகமாக இருக்கும்போது மட்டும், 70 முதல் 75 லாரிகளில் தக்காளி விற்பனைக்காக வரும்.
விலை உயா்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சாா்பில், நியாயவிலைக் கடைகள், பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள், கூட்டுறவு கடைகள் மூலம் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. சென்னைக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று ஒரே நாளில் ரூ.30 குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.