சென்னை: ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில், ‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் வாலட்’ போன்றவற்றை பயன்படுத்தி, ‘டிஜிட்டல்’ முறையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட, 5 சதவீதம் கட்டண சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில், பயணியர் வருகையை அதிகரிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்கவும், ரயில்வே நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வகையில், டிக்கெட் கவுன்டரில், டிஜிட்டல் பரிவர்த்தனையாக, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், அடிப்படை கட்டணத்தில், 5 சதவீதம் தள்ளுபடி தரும் வசதி, ஏப்., 2ல் அறிமுகம் செய்யப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு, இது, சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என, ரயில்வே தெரிவித்திருந்தது. டிக்கெட் கவுன்டரில், டிஜிட்டல் முறையில், யு.பி.ஐ., வசதியை பயன்படுத்தி, பண பரிமாற்றம் செய்வோர்கள், இந்த சலுகை பெறலாம்.ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் மட்டுமே, இத்திட்டம் செல்லுபடியாகும். இச்சலுகையை பெற, டிக்கெட் கட்டணம், 100 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.
இதில், அதிகபட்சமாக, 50 ரூபாய் வரை சலுகை பெறலாம். இந்நிலையில், 5 சதவீத கட்டண தள்ளுபடி சலுகை, 2019 ஜூன், 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, ரயில்வே தெரிவித்துள்ளது.