train-61115சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுக்களை எடுக்கும் நிலையை தவிர்க்க கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி செல்பொன் ஆப்ஸ் மூலம் டிக்கெட்டுக்கள் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கவுன்ட்டர்களில் நின்று டிக்கெட் எடுக்கும் நேரம் மிச்சமானது. இந்நிலையில் சென்னை மின்சார ரயில் சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் ஆகியவற்றையும் செல்போன் செயலி மூலம் பெறும் வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலம் எடுக்கும் டிக்கெட்டை பிரின்ட்கூட எடுக்கத் தேவையில்லை என்றும் டிக்கெட் பரிசோதகரிடம் செல்போனில் பதிவிறக்கம் செய்ததையே காட்டினாலே போதும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய நடைமுறையால் புறநகர் ரயில்களில் சீசன் டிக்கெட் பயன்படுத்தும் 52 சதவீத பயணிகள் பயன் அடைவார்கள். ‘ஆண்ட்ராய்டு’ வசதியுள்ள ஸ்மார்ட் போன்கள் மூலம் இந்த சேவையை பெறலாம். இதே போல் பிளாட்பாரம் டிக்கெட்டையும் செல்போன் மூலம் எடுக்கலாம். சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 2 கி.மீ. தூரத்தில் வரும்போதே செல்போன் மூலம் பிளாட்பார டிக்கெட்டை பெற முடியும்.

செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பது அதை சோதனைக்கு வரும் பரிசோதகர்களிடம் எப்படி காண்பிப்பது என்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மின்சார ரயில் டிக்கெட், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் ஆகியவற்றை செல்போன் மூலம் பெற முதலில் பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்டை மற்றவர்களுக்கு அனுப்ப இயலாது. ஒருமுறை பதிவு செய்த பின் மாற்றம் செய்ய இயலாது. பதிவு செய்த பிறகும் செல்போனில் இணையதள சேவை இருக்க வேண்டும். அப்போதுதான், டிக்கெட் பரிசோதகர் வரும்போது டிக்கெட்டை எடுத்துக் காட்ட முடியும். அப்ளிகேஷன் உள்ளே சென்று ‘ஷோ ஆப்ஷன்’ என்ற பட்டனை அழுத்தினால் பதிவு செய்த டிக்கெட்டை காணலாம். இதுதொடர்பாக முழுமையான தகவல்களை பெற www.sr.indianrailways.gov.in என்ற இணைதளத்தை பார்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
english summary-Chennai local train tickets can be booked from mobile app