திருவள்ளூர் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஏலகிரி விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமாகச் சென்றது.
சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ஏலகிரி பயணிகள் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருவள்ளூருக்கும்-புட்லூருக்கும் இடையே சென்றபோது, 6.45 மணியளவில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சப்தம் கேட்டு ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, கீழே இறங்கிப் பார்த்தபோது, தண்டவாளத்தை இணைக்கும் பகுதியில் பழுது ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, பணியாளர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தின் இணைப்பை சரி செய்தனர். அதைத் தொடர்ந்து, ஏலகிரி விரைவு ரயில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
தண்டவாள இணைப்பு பழுது காரணமாக ஏலகிரி விரைவு ரயில் அரைமணி நேரம் காலதாமதமாகச் சென்றது. விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பல்வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள்ளாயினர்