சென்னையின் மையப்பகுதியான வடபழநியில் உள்ள முருகன் கோவிலில் முகூர்த்த நாட்களில் ஒரே நாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதால் கோவில் அருகில் உள்ள வீடுகளின் வாழும் மக்கள் நெரிசலுக்கு உள்ளாவதாகவும் இதுகுறித்து கட்டுப்படு உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது: ‘வடபழனி முருகன் கோவிலில் முகூர்த்த நாட்களில், ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதால் திருமண விழாவுக்கு வருபவர்கள் வாகனங்களை கோவிலுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு முன்பு நிறுத்திச் சென்று விடுவதாகவும், இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் எனவே, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முகூர்த்த நாளில் 3 திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது போல் வடபழனி கோவிலில் கட்டுப்பாடு கொண்டுவர உத்தரவிடவேண்டும்‘ என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகி வாதாடியதாவது: ‘வடபழனி கோவிலில் முகூர்த்த நாளில், தலா 15 திருமணங்கள் என்ற வீதத்தில் 4 கட்டங்களாக பிரித்து, திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் தம்பதியரின் உறவினர் என்று 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘வடபழனி கோவிலை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷனர்களை நியமிக்கவேண்டும்‘ என்று கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘வக்கீல் ஏ.ஜே.ஜாவத் என்பவரை சட்ட ஆணையராக நியமிக்கிறோம். இவர், முகூர்த்த நாட்களில் வடபழனி கோவிலுக்கு சென்று ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அப்போது, புகைப்படம், வீடியோ எடுக்க ஒருவரை அவர் நியமித்துக்கொள்ளலாம். மேலும், போலீசாரும் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 2016-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்‘ என்று உத்தரவிட்டுள்ளனர்.
English summary-More marriages at vadapalani murugan temple