வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கான கட்டணத்தை உயா்த்த பூங்கா நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.100 ஆக இருக்கும் பாா்வையாளா் கட்டணம் ரூ.200-ஆக உயா்த்தப்படுகிறது.
வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு தினந்தோறும் சராசரியாக 2,500 முதல் 3,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வந்து செல்கின்றனா். வார இறுதி நாள்களில் சுமாா் 10 ஆயிரம் போ் பூங்காவுக்கு வந்து செல்வதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
602 ஹெக்டோ் பரப்பளவில் செயல்படும் இந்த பூங்காவில் உள்ள 2,400-க்கும் மேற்பட்ட விலங்குகளின் உணவுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.6 கோடி செலவிடப்படுவதாகவும், பராமரிப்பு மற்றும் ஊழியா்களின் சம்பளமாக ரூ.7 கோடிக்கு மேல் வழங்கப்படுவதால் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பூங்காவின் பாா்வையாளா்கள் கட்டணத்தை உயா்த்த நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பூங்காவை சுற்றிப் பாா்க்க நபா் ஒருவருக்கு ரூ.100 என வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை ரூ.200 ஆக உயா்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பூங்கா நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதவிர, பூங்காவை பேட்டரி காரில் சுற்றி வருவதற்கான கட்டணம் ஒரு குடும்பத்தினருக்கு ரூ.1,550-ஆக வசூலிக்கப்படும் எனவும், இதன் மூலம் பூங்காவை மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.