பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நேற்று மாலை 5 மணி வரை 16 ஆயிரத்து 715 பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் தபால் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் வரவேண்டிய நிலை இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் கடந்த ஆண்டை இட இந்த ஆண்டு குறைவான விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014-15 கல்வியாண்டில் பி.வி.எஸ்.சி., பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 18,698 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 16 ஆயிரத்து 715 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். தபால் மூலம் வரும் விண்ணப்பங்களை சேர்த்தாலும் 17 ஆயிரம் விண்ணப்பங்களே மொத்தம் வரும் என கூறப்படுகிறது.
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பை (பி.வி.எஸ்சி.) பொருத்தவரை சென்னையில் 120 இடங்கள், நாமக்கல்லில் 80 இடங்கள், , திருநெல்வேலியில் 40 இடங்கள், ஒரத்தநாட்டில் 40 இடங்கள், என மொத்தம் 280 இடங்கள் மட்டுமே உள்ளன. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டுப் பிரிவின் கீழ் 5 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 1 இடமும், பிளஸ் 2 தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்படும். மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு (இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில்) 48 இடங்கள் ஒதுக்கப்படும்.
பி.வி.எஸ்சி., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய மூன்று தினங்களில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளதாகவும் முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
English Summary: Veterinary Doctors counselling dates announced.