பொதுவாக சட்டமன்ற தேர்தலுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைதான் வாக்குப்பதிவு நடைபெறும் ஆனால் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவு இட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம், புதுவை, கேரளா உள்பட சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் இந்த தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட உள்ளனர். அத்துடன் வெளிமாநிலங்களில் இருந்தும் போலீசார் வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது, வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஆனால் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் மாற்றப்பட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் மே 16-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதாவது ஓட்டுப்பதிவு நேரம், 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது தேர்தல் நடைபெறுவதால், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நேரத்தை தேர்தல் கமிஷன் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.
மக்கள் பிரதிநிதித்துவசட்டத்தின்படி, தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும், வாக்குப்பதிவு நடைபெறும் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. அத்துடன், வருகிற 4ஆம் தேதி காலை 7 மணி முதல் மே 16ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடவும் தேர்தல் கமிஷன் தடை விதித்து இருக்கிறது.
இதனிடையே தேர்தல் பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தேர்தல் கமிஷன் விடுத்த அழைப்பை ஏற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் துணை தேர்தல் கமிஷனர்கள் உமேஷ் சின்கா, சந்தீப் சக்சேனா மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டசபை தேர்தலுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது பற்றி விளக்கி கூறினார்.
English Summary: Vote till 6 in the evening for Summer.