சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் உள்ளிட்ட 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவில் தற்போது தேங்கியிருக்கும் நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் இறைக்கும் பணியை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது.
சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. எனினும் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாதது, ஒப்பந்த அடிப்படையில் கிருஷ்ணா குடிநீர் கிடைக்காதது போன்ற காரணங்களால் தற்போது 55 கோடி லிட்டர் மட்டுமே சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு தினமும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலிருந்தே கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்வதற்கு குடிநீர் வாரியம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விடும் நிலையில் உள்ளன. அவற்றின் மொத்தக் கொள்ளளவில் (11,257 மில்லியன் கன அடி) செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 809 மில்லியன் கன அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்நிலையில், கோடையைச் சமாளிக்க புழல், சோழவரம் ஏரிகளில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நீர் கோடை வெப்பத்தால் வற்றி விடும் முன்னரே ராட்சத மின்மோட்டார்கள் மூலம் இறைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: புழல் ஏரியில் தண்ணீரின் அளவு குறைந்த நிலையில் ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் ஜோன்ஸ் டவர் பகுதியில் குட்டை போல் நீர் தேங்கியுள்ளது. சுமார் 2 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த தண்ணீர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட பின், ஏரியில் ஆங்காங்கே இருக்கும் தண்ணீரை சிறிய அளவில் வாய்க்கால் அமைத்து, ஒரே இடத்துக்கு கொண்டு வந்து, மின்மோட்டார்கள் மூலம் குழாய்களில் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
மாற்று ஏற்பாடுகள் என்ன?: தற்போதைய சூழலில் சென்னையின் குடிநீர் தேவையை, கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், கல்குவாரி தண்ணீர் மற்றும் ஏரிகளில் இருந்து கிடைக்கும் சொற்ப அளவு தண்ணீரைக் கொண்டு சமாளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை வெகு நாள்கள் நீடிக்க வாய்ப்பு இல்லை என்பதால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வீராணம், நெய்வேலி சுரங்கம், விவசாய பம்பு செட்டுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லாததால், அவை அனைத்தும் தூர்வாரப்படும். ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் எடுத்து முடித்தவுடன் தூர் வாரும் பணி நடைபெறும். இதேபோன்று சோழவரம் ஏரியில் மோட்டார்கள் மூலம் நீரை இறைக்கும் பணி கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது என்றனர்.
ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம் ( மில்லியன் கன அடியில், மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்):
பூண்டி – 386 (3,231), சோழவரம் – 47 (1,081).
புழல் – 363 (3,300). செம்பரம்பாக்கம் – 13 (3,645).
மொத்தம்- 809 (11,257).