குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புழல் ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் திகழ்கின்றன. இதில், 881 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவுடைய சோழவரம் ஏரி போதுமான மழையின்மை காரணமாக கடந்த சில மாதங்களாகவே வறண்டு காணப்படுகின்றது. பருவமழை பொய்ப்பு, வெப்ப தாக்கம் அதிகரிப்பு, ஆந்திர மாநிலம் கண்டேலுறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் நிறுத்தம் ஆகிய காரணங்களால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.
3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவுடைய பூண்டி ஏரியில் 57 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 192 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 197 மில்லியன் கன அடி மட்டுமே (நேற்றைய நிலவரப்படி) தண்ணீர் இருப்பு உள்ளது.
4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி ஆகும். அதில், 446 மில்லியன் கன அடி மட்டுமே தற்போது தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு மொத்த ஏரிகளில் நீர்மட்டம் 2 ஆயிரத்து 357 மில்லியன் கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் போல் காட்சியளித்த ஏரிகள் இன்று தண்ணீ இன்றி வறட்சியாக காட்சியளிக்கின்றன. ஏரிகள் கைவிட்டாலும் தமிழக அரசு ஏற்படுத்திய குடிநீர் திட்டங்கள் தற்போது சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளித்து வருகிறது.
மீஞ்சூர், நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் கன அடி தண்ணீரும், மேட்டூர் அணையில் இருந்து கடலூர் வழியாக 180 மில்லியன் கன அடி வீராணம் தண்ணீரும் அன்றாடம் சீராக வந்து, சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கைக்கொடுக்கிறது. அதுமட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 200 விவசாய கிணறுகளை சென்னை குடிநீர் வாரியம் வாடகைக்கு எடுத்து அதன் மூலம் தினசரி 70 மில்லியன் கன அடி தண்ணீரை சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக சப்ளை செய்து வருகிறது.
எனினும் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை சமாளிக்கும் நடவடிக்கையாக புழல் ஏரியில் இருப்பு உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து குடிநீர் சப்ளை செய்யும் முயற்சியில் குடிநீர் வாரியம் இறங்கி உள்ளது. அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3 மோட்டார்கள் மூலம் எடுக்கப்பட்டு வந்த தண்ணீர் தற்போது 9 மோட்டார்கள் மூலம் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு மோட்டார் மூலம் எடுக்கப்படும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த முயற்சிகளும் ஒருசில நாட்களுக்கு மட்டுமே செய்ய முடியும் என்றும் பருவமழை பெய்தால் மட்டுமே சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Water shortage in Chennai. Drinking water is now supplied from lake.