10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளிவந்துவிட்டது. முழு ஆண்டு தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக ஆயத்தமாகி வருகின்றனர். தேர்வுக்கு படிப்பதில் திட்டமிடுதல் குறித்தும் தேர்வு நேரத்தில் மாணவர்கள் பதட்டம் அடையாமல் இருக்கவும் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
* தன்னம்பிக்கை அவசியம் : உங்கள் தகுதிகள், திறமைகளைப் பற்றி நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்களும் இந்த உலகில் ஏதோ ஒன்றை சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள்.
* இலக்கை தீர்மானியுங்கள் : தேர்வில் தேர்ச்சி பெறுவதையும், அதிகபட்ச மதிப்பெண் பெற்று உங்கள் கனவுத் துறையில் கால்பதிப்பது பற்றியும் கனவு காணுங்கள். அதையே லட்சியமாக கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்களுடன் போராடுங்கள்.
* அட்டவணையை உருவாக்குங்கள் : ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பாடத்திட்டங்களை அட்டவணையாக தயாரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் தீர்மானியுங்கள். அதன்படி செயல்படுங்கள்.
* இயல்பாக இருங்கள் : நிறைய படிக்க வேண்டியதிருந்தாலும் மன அழுத்தத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களால் முடிந்த அளவில் படியுங்கள். குறிப்பிட்ட நேரம் படித்த பின்பு சிறிது ஓய்வெடுங்கள்.
* ஓய்வும், புத்துணர்ச்சியும் : தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்குவதற்கு ஒதுக்குங்கள். எழுந்ததும் சுமார் 15 நிமிட நேரம், பசுமையான பரப்பில் நடந்து குளுமையான காற்றை சுவாசித்து புத்துணர்ச்சியை பெருக்கிக் கொள்ளுங்கள். மனம் ஒருமுகப்படுத்தும் தியானப் பயிற்சியும் மேற்கொள்ளலாம். வயிற்றுக்கு உணவு அருந்துங்கள்.
* ஒப்பிட வேண்டாம் : நன்றாகப் படிக்கும் நண்பனுடன் உங்களை ஒப்பிட்டு, மனம் தளர வேண்டாம். உங்கள் திறமைக்கேற்ற துறையில் நீங்களும் உச்சம் தொடலாம்.
* கலங்க வேண்டாம் : உங்கள் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து தேர்வு எழுதத் தொடங்குங்கள். வினாத்தாள் கடினமாக இருப்பதாக எண்ணி கலக்கம் அடைய வேண்டாம். எல்லா வினாக்களும் உங்களுக்கான பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே, ‘இவை முக்கியம்’ என்று ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டு படிக்கப்பட்டவையே என்பதால் கவலை வேண்டாம். அவற்றுக்கு அப்பாற்பட்டு ஒருசில வினாக்கள் இடம் பெற்றிருந்தாலும் பயப்பட தேவையில்லை.
* படித்ததை எழுதுங்கள் : வினாக்கள் கடினமாகத் தெரிந்தாலும் மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். சுவாசத்தை ஆழமாக இழுத்து, மெதுவாக வெளியிடுங்கள். இதனால் மன அழுத்தம் குறைவதால் புத்துணர்ச்சி கிடைக்கும். பிறகு உங்களுக்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டும் தைரியமாக விடையளியுங்கள். இப்போது அந்த நம்பிக்கையே, அதிகம் நினைவுக்கு வராத பகுதிகளையும் ஞாபகத்திற்கு கொண்டுவந்து மேலும் பல வினாக்களுக்கு விடையளிக்கும் உந்துசக்தியைத் தரும்.
* மதிப்பிட வேண்டாம் : எழுதிய தேர்வை பற்றி யோசிக்க வேண்டாம். இதற்கு இதுதானே சரியான பதில்? என்று நண்பனுடன் விவாதிப்பதோ? இந்த கேள்விக்கு என்ன விடையளித்தோம்? என்று யோசிப்பதோ, ‘நமக்கு எவ்வளவு மதிப்பெண் வரும்’ என்று மதிப்பிடுவதோ? வேண்டாம். இவற்றதால் மன அழுத்தம் கூடுவதை தவிர எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.
* அடுத்தது என்ன? : கடந்த தேர்வைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கிவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள். அடுத்த தேர்வுக்காக படிப்பது, நண்பர்களுடன் உரையாடி மகிழ்வது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்ப்பது என மனதை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களில் ஈடுபடுங்கள். தேர்வு முடிவுகள் எதிர்பாராத வகையில் அமைந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
மேலே உள்ள முக்கிய அம்சங்களை மனதில் வைத்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றி கிடைப்பதோடு மன அழுத்தம் இன்றி அதிக மதிப்பெண்களை பெறலாம். எனவே மாணவர்கள் மேற்கண்டவற்றை மனதில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
English Summary: What are the main things that 10 and 12 students need to consider to prepare for their board exams?