கோடை காலம் தொடங்கியதில் இருந்தே, தமிழகத்தின் பல இடங்களில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்தனர். இரவில் புழுக்கத்தால் உறங்க முடியாமல் பலரும் தவித்தனர். திடீரென மின் வெட்டு ஏற்பட காரணம் புரியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், மின்வெட்டுக்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதில், மத்திய தொகுப்பில் இருந்து வரக்கூடிய மின் தொகுப்பு வினியோகத்தில் தடை பட்டதே மின் தடைக்கு காரணம் என்று தெரிவித்தார். மத்திய தொகுப்பில் இருந்து தென் மா நிலங்களுக்கு வரக்கூடிய மின்சாரத்தில் 750 மெகா வாட் தடைபட்டது. உடனடியாக மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.