GST-Bill-400x230பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டு வருவதுதான் ஜிஎஸ்டியின் நோக்கம். ஜிஎஸ்டி என்பதை நுகர்வு அல்லது பயன்பாட்டு வரி என்றும் கூறலாம்.

எனவே, ஒரு சேவை அல்லது பொருள், நுகர்வோரால் பயன்படுத்தப்படும்வரை இந்த வரியின் கரங்கள் நீளும். வரி விதிப்பு என்பது வெளிப்படையானதாக மாறிவிடும், எளிதானதாக இருக்கும். எனவே எந்த பொருளுக்கு வரி விலக்கு உள்ளது, எதற்கு வரி விலக்கு இல்லை என்பது போன்ற தகவல்கள் எளிதாக அனைவருக்கும் புரியும். வரி வசூலுக்கு உதவும். இதனால் அரசின் வருமானம் அதிகரிக்கும். வரி விலக்கு லாபங்களை பார்த்து அந்த பகுதிகளில் தொழில் தொடங்காமல், தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும். நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி அதிகரிக்கும்.

ஒரு பொருளுக்கு இப்படி பல இடங்களில், பல விதமாக வரிகள் கட்டுவதால் அதற்கு அதிகப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டியதுள்ளது. எனவேதான், நாடெங்கும் ஒரே முறையிலான வரி விதிப்புக்கான “சரக்கு மற்றும் சேவை வரி” மசோதா தயாரிக்கப்பட்டது. நாடாளுமன்ற லோக்சபாவில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை பலம் இருப்பதால், அங்கு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மிக எளிதாக நிறை வேற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் ராஜ்யசபாவிலும் நேற்று முன் தினம் இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்த புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம். சரக்கு மற்றும் சேவை வரியால் கிடைக்கப் போகும் மிகப்பெரிய நன்மையாக, நுகர் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்பது உறுதியாகியுள்ளது. வீட்டு உபயோக பொருட்களான, பிரிட்ஜ், டி.வி, ஏசி போன்றவற்றின் விலை குறையும். அதேபோல சிறிய ரக கார்களின் விலையும் கணிசமாக குறையும். ஏனெனில், தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வரிகளாக 30 சதவீதம் அளவுக்கு வரி செலுத்துகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்தை ஒட்டி இருக்கும் என தெரிகிறது. அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒருவேளை 18 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 12 சதவீத வரி லாபம் பெறும். அந்த பலன் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். அதேபோல, கட்டுமான பொருட்கள், பெயிண்ட் விலை குறையக்கூடும். அதேநேரம், செல்போன் விலை உயரக்கூடும் என்றும் சிகரெட் விலை, மருந்து பொருட்கள் விலை, விமான டிக்கெட் விலை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

English Summary : What is the GST? What products will rise in price?