tambaram3216சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு ரயில் முனையங்கள் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பயணிகளின் நெருக்கடியை தவிர்க்க மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையத்தை மாற்ற கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடக்கவிழா நடைபெற்று முடிந்த நிலையில் இந்த மூன்றாவது முனையத்தின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் குறித்து கருத்து கூறிய வசிஷ்டா ஜோரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாம்பரம் ரயில் முனையப் பணிகளை முடிக்க இந்த ரயில்வே பட்ஜெட்டில் ரூ.10 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாம்பரம் ரயில் முனையமாக்கும் முதல் கட்ட பணிகள் ஜூனில் முடிவடையும். சென்னையில் பெய்த பெரு மழை காரணமாக மார்ச் மாதம் முடிக்க வேண்டிய பணிகள் ஜூன் மாதம் முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சென்னை புறநகர் ரயில் திட்டங்கள், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதற்கு, நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு ஆகியவை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது, அதற்கான நிலத்தை மாநில அரசு இலவசமாக வழங்க வேண்டும். அந்த நிலத்துக்கான மதிப்பீட்டை ஒதுக்கப்பட்ட நிதியுடன் இணைக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு இதனை ஆட்சேபித்து, மாநில அரசு வழங்கும் நிலத்துக்கான மதிப்பீட்டையும் ஒப்பந்தத்துடன் இணைக்க வேண்டும் என கோருகிறது. இந்த முரண்பாடுகள் களையப்பட்டு விரைவில் தமிழக அரசுடன் ரயில்வே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும். பக்கத்து மாநிலமான கேரளத்துடனும், ரயில்வே பணிகளை இணைந்து மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
சென்னை கோட்டத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.11.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்துக்கு ரூ.9.3 கோடியும், திருச்சிக்கு ரூ 2.75 கோடியிலும் அடிப்படை வசதிகள் மாற்றியமைக்கப்படவுள்ளன.

மேலும் 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் புதிய வழித்தடம், அகலப்படுத்தும் பணி, இருவழிப்பாதை பணிகளை முடிக்க தமிழகத்துக்கு ரூ.1,508 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இதே பணிகளுக்கு ரூ.1,100 கோடியே 95 லட்சம் ஒதுக்கப்பட்டது. பணிகளின் விவரம்: புதிய வழித்தடப் பணிகளுக்கு இப்போது ரூ.50.38 கோடி, அகலப்பாதை பணிக்கு ரூ.332 கோடி, இருவழிப்பாதை பணிக்கு ரூ.1,126.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2016 – 2017 இல் செங்கோட்டை – புனலூர் 49 கி.மீ., காரைக்குடி – பட்டுக்கோட்டை 73 கி.மீ., சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை 3,4-ஆவது பாதை 8 கி.மீ., எண்ணூர் – கொருக்குப்பேட்டை 4-ஆவது பாதை 12 கி.மீ., என மொத்தம் 142 கி.மீ.க்கான அகலப்பாதை பணிகள் முடிவடையும். இருவழிப்பாதை அமைக்கும் பணியில் முக்கியமாக சென்னை – மதுரை 100 கி.மீட்டருக்கு பணிகள் 2017 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். மேலும், விழுப்புரம் – திண்டுக்கல் 110 கி.மீட்டருக்கான பணிகளும், தஞ்சாவூர் – பொன்மலை இடையிலான 47 கி.மீட்டருக்கான பணிகளும் முடிக்கப்படும்.

இவ்வாறு வசிஷ்டா ஜோரி தெரிவித்தார்.

English Summary: When acting as Tambaram 3rd terminal? Railways General Information.