annauniversity

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வு முடிந்தவுடன் அடுத்தகட்டமாக மாணவர்கள் பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். எனவே வரும் 2016-17-ஆம்  கல்வி ஆண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் எப்போது என்பது குறித்த முக்கிய ஆலோசனை சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சென்னை அண்ணா பல்கலையின் துணைவேந்தர் ராஜாராம் தலைமை வகித்தார். வழக்கமாக விண்ணப்ப விநியோகம் மே முதல் வாரத்தில் தொடங்கும். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்பதோடு, மையங்கள் மூலமும் விநியோகிக்கப்படும்.

இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மையங்கள் மூலமான பொறியியல் சேர்க்கை விண்ணப்ப விநியோகத்தைத் தள்ளிப்போடுவதா அல்லது மே முதல் வாரத்திலேயே வழங்குவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஆலோசனையில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் கூறியதாவது:  கடந்த 4 ஆண்டுகளில் கலந்தாய்வு எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வேறு எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை.  அடுத்தடுத்து நடைபெற உள்ள கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்தான், எவ்வளவு விண்ணப்பங்களை அச்சடிப்பது, கட்டணம், விநியோகம் தாடங்குவது எப்போது என்பன குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

English Summary: When the B.E application supplies for the year of 2016-17.