12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அதன் பின்னர் அதை பிரிண்ட் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய நாளை அதாவது மே 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 4 என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 836 பேர் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய சில நாட்களில் பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் நடைமுறை உள்ளது. அதனால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 20ஆம் தேதிக்கு பின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 26ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை உள்பட 20 அரசு மருத்துவ கல்லூரிக்கு பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இதுவரை 13,725 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் பெற ஜுன் 6-ந்தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி தேர்வு குழு அலுவலகத்திற்கு வந்து சேர ஜூன் 7-ந்தேதி கடைசி நாளாகும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி தேர்வுக்குழு அலுவலக வாசலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
English Summary: When Will Start a Engineering Counselling?