கட்டுமான வழிகாட்டுதல்களையும், அளவீடுகளையும் முறையாகப் பின்பற்றாததே இன்றைய கட்டுமானங்கள் 20 ஆண்டுகள்கூட தாங்குவதில்லை என கட்டடவியல் நிபுணரும் ஐஐடி பேராசிரியருமான சாந்தகுமார் கூறினார்.
கட்டுமானத் தொழில் அகாதெமி சார்பில் பழுதில்லா கட்டுமானங்கள் என்ற தலைப்பிலான பயிலரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க அரங்கில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. பயிலரங்கைத் தொடங்கி வைத்த பேராசிரியர் சாந்தகுமார் பேசியதாவது:
கரிகால் சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை, ராஜராஜ சோழ மன்னரால் 11-ஆம் நூற்றாண்டில் கட்டிய தஞ்சை பெரிய கோயில் ஆகியன இன்றும் திடமாக நிற்கின்றன. ஆனால், இன்றைக்கு நாம் கட்டுகின்ற கட்டடங்கள் 20 ஆண்டுகள்கூட தாங்குவதில்லை. இதற்கு , கட்டுமான வழிகாட்டுதல்களையும், அளவீடுகளையும் முறையாகப் பின்பற்றாததே காரணம். அண்மையில், தமிழகத்தைச் சேர்ந்த 20 கட்டுமான நிறுவனங்களின் 22 கட்டுமான வடிவத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், அவை அனைத்திலும் கட்டுமான கம்பிகள் முறையான நீளத்தில் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. இவ்வாறு கட்டப்படும் கட்டடங்கள் நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விடும்.
கட்டுமான இடத்தில் என்னென்ன இருக்க வேண்டும்?: ஒரு தரமான கட்டுமானத்துக்கு மிக முக்கியமானது சிமெண்ட் – தண்ணீர் கலவையின் அளவுதான். இந்த இரண்டும் சரியான அளவில் மட்டுமே கலக்கப்பட வேண்டும்.
ஆனால், இது எந்தவொரு கட்டுமானத்திலும் பின்பற்றப்படுவதில்லை. பெரும்பாலான கட்டுமான இடங்களில் கலவை இயந்திரம் சுற்றிக்கொண்டே இருக்கும்; ஒரு நபர் அதில் தண்ணீரை எந்த அளவும் இன்றி ஊற்றிக் கொண்டே இருப்பார். இது மிகவும் தவறான நடைமுறை. இதைத் தவிர்க்க குறிப்பிட்ட ஆய்வுக் கருவிகள் ஒவ்வொரு கட்டுமான இடத்திலும் இருப்பது அவசியமாகும்.
அதாவது, சிமெண்ட்- தண்ணீர் கலவை அளவீடுகளை அளவிடும் கருவி, எடைக் கருவி, மண் ஈரப்பதத்தை அளவிடும் கருவி ஆகியவை இருப்பது மிக அவசியமாகும். அதுபோல, கட்டுமானங்களில் நீள வாக்கில் பயன்படுத்தப்படும் கம்பிகளை 45 டிகிரி அளவுக்கு மேல் வளைக்கக் கூடாது. அவ்வாறு 45 டிகிரிக்கு மேல் வளைக்கப்படும் கம்பிகளின் தாங்கும் திறன் பூஜ்ஜியமாகிவிடும்.
சென்னை போன்ற கடலோரப் பகுதிகளுக்கு… சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான கட்டுமானங்களில் எம்20, எம்25 என்ற விகிதத்தில் கான்கிரீட் கலவை அளவுகளையே பயன்படுத்துகின்றனர். கடல் பகுதி என்பதால், இந்த விகிதத்தில் கட்டப்படும் கட்டடங்கள் விரைவில் அரித்தல் பாதிப்புக்கு ஆளாகிவிடும். எனவே, சென்னை போன்ற நகரங்களில் குறைந்தபட்சம் எம்30 கலவை விகிதத்தை பின்பற்றுவது அவசியம்.
தொடர் பராமரிப்பு அவசியம்: இவ்வாறு, வழிகாட்டுதல்களையும், அளவீடுகளையும் முறையாகப் பின்பற்றி கட்டப்படும் கட்டுமானங்களும், பல ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்றால், தொடர் பராமரிப்பு மிக அவசியமாகும். அவ்வாறு, தொடர் பராமரிப்பு இல்லாத கட்டடங்கள் விரைவில் பாதிப்புக்குள்ளாகும் என்றார் அவர். இந்தப் பயிலரங்கில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் டீன் எம்.சேகர், விஐடி பேராசிரியர் எஸ்.கே.சேகர், கட்டுமானப் பொறியாளர் சரவணன், கட்டுமான தொழில் அகாதெமி நிறுவனர் சிந்து பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.