பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் ரூ.80 கோடி சிலைத்திருட்டு வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மே மாதம் ஆட்டோவில் சுமார் ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கடத்தப்பட்டபோது போலீஸார் அதிரடி நடவடிக்கை மூலம் அந்த சிலைகளை மீட்டு, சிலைகளை கடத்தியவர்களை வலைவீசி தேடி வந்தனர். பூதேவி, சீதேவி, சிவன், பார்வதி ஆகிய இந்த சிலைகள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சவுந்தர்யபுரம் ஆகிய ஊரில் உள்ள கோவில்களில் இருந்து திருடி கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் இதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீஸார் இந்த சிலை கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களாக சந்தேகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகியோர்களை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இந்த சிலை திருட்டுக்கு சதித்திட்டம் தீட்ட இயக்குனர் வி.சேகரும் உடந்தையாக இருந்ததும் திருடப்பட்ட சிலைகள் அவருடைய வீட்டில்தான் சில நாட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதன்பின்னர் நேற்று இரவு வி.சேகரை போலீஸார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் வி.சேகர், தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலம் இதுதான்: “குடும்ப பாங்கான படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற கொள்கையுடன் திரையுலக்கு வந்து இதுவரை பல படங்களை இயக்கி உள்ளேன். தற்போது எனது மகனை வைத்து ‘சரவண பொய்கை’ என்ற படத்தை எடுத்து வருகிறேன். சினிமாவில் போதிய வருமானம் இல்லாததும் சிலை கடத்தலுக்கு என்னை இழுத்து வந்தது.
கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் ஆசையில் என்னையும் அறியாமல் ஈடுபட்டு விட்டேன். சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் சிலர் மூலமாக எனக்கு சிலை கடத்தல் கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த 8 சிலைகளும் கடந்த ஜனவரி மாதம் வெவ்வேறு கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சிலைகள் சில மாதங்கள் எனது வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தன. நான் சினிமாவில் தரமான படங்களை இயக்கி வந்ததால் என் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
இந்த சிலைகளை விற்பதற்காக சிலை வாங்கி விற்கும் புரோக்கர்கள் கலந்து கொள்ளும் ரகசிய கலந்தாய்வு கூட்டமும் அடிக்கடி நடைபெறும். இதில் நானும் பலமுறை பங்கேற்று உள்ளேன். இந்த சிலைகளை எப்படியாவது வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக அனுப்பி விற்று விட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர்”
வி.சேகரின் இந்த வாக்குமூலத்தால் தமிழ்த்திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
English Summary:Why Joined Abduction Group?Director V.Sekar Confessions.