உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்த இரு வனச் சரகங்களிலும் ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி டிசம்பர் 19ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சின்னாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், உடுமலை வனச் சரகர் தனபாலன், அமராவதி வனச் சரகர் முருகேசன் மற்றும் வன அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை துவங்கியது. இதற்காக உடுமலை வனச் சரகத்தில் 24 குழுக்களும், அமராவதி வனச் சரகத்தில் 18 குழுக்களும் என மொத்தம் 42 குழுக்கள் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளன.
ஒரு குழுவுக்கு ஒரு வன ஊழியர், ஒரு வேட்டை தடுப்புக் காவலர், ஒரு தன்னார்வலர் உள்ளிட்டோர் இந்த பணிகளைக் கவனிப்பார்கள். ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பணிகள் நடை பெற உள்ளன. வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.