சென்னை விமான நிலையத்தின் கட்டிடங்களில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அடிக்கடி கீழே விழுந்து பயணிகளை பயமுறித்தி வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தின் ரன்வே என கூறப்படும் ஓடுபாதையும் சேதமாகி இருப்பதாகவும், சேதமாகியுள்ள பிரதான ஓடுபாதையை செப்பனிடும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளதாகவும், இதன் காரணங்களால் விமானங்கள் புறப்படும் மற்றும், தரையிறங்கும் நேரங்களில் ஒருசில மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தின் ரன்வே 3658 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டது. தினந்தோறும் பல விமானங்கள் வந்து செல்வதால் சென்னை விமான நிலைய பிரதான ஓடுபாதையில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் குண்டும், குழியுமாக இருந்து வருவதால் இவற்றை சரிசெய்ய அவ்வப்போது பூசுவேலை செய்யப்பட்டது. ஆனாலும் இந்த ஓடுபாதையில் அவ்வளவு இலகுவாக விமானங்கள் தரையிறங்க முடியவில்லை.
சென்னை விமான நிலையத்தில் ஒரு மணிநேரத்துக்கு 29 விமானங்கள் ஊர்ந்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டிய பிரதான ஓடுதளத்தில் உள்ள மேடு, பள்ளங்களின் விளைவாக இவ்வழியாக தரையிறங்கும் விமானங்கள் லேசாக குலுங்கும் சூழ்நிலை ஏற்பட்டு இதன் காரணமாக பயணிகளுக்கு அசெளகரியமும் இருந்து வருகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் தரையிறங்கும் விமானங்களின் டயர்கள் லேசாக வழுக்குவதாகவும் விமானிகள் கவலையுடன் தெரிவித்து வந்தனர். இதே நிலை நீடித்தால், ஓடுபாதையை விட்டு விலகி அருகாமையில் உள்ள புல்வெளிக்குள் விமானங்கள் விலகி சென்றுவிடும் அபாயம் இருப்பதாக என அதிகாரிகள் கருதினார்கள்.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகள் கடைசியாக கடந்த 2003ஆம் ஆண்டு செப்பனிட்டு, புதுப்பிக்கப்பட்டது. எனவே இந்த ஓடுபாதையை மீண்டும் புதிதாக செப்பனிட்டு சீரமைக்க முடிவு செய்த இந்திய விமான நிலைய பராமரிப்பு குழும அதிகாரிகள் இந்தப் பணிக்காக ரூ.40 கோடியை ஒத்துக்கீடு செய்துள்ளனர். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையை புதுப்பிக்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது. 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தப் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்பனிடும் பணிகளுக்கு பின்னர் பிரதான ஓடுபாதை புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, பக்கவாட்டில் உள்ள இரண்டாவது ஓடுபாதை வழியாக விமானங்கள் புறப்பட்டு செல்லவும், தரையிறங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது. அவ்வாறன்றி, புதுப்பிக்கும் பணிகளுக்கு இடையிலும், வழக்கமான பிரதான ஓடுபாதையையே பயன்படுத்துவதானால், விமானங்களின் வந்துசேரும் மற்றும் தரையிறங்கும் நேர அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி, நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டால், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்பினை சென்னை விமான நிலைய பராமரிப்பு குழு அதிகாரிகள் செய்திக் குறிப்பாக வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.
English Summary : Will flight timing change due to maintanence in Chennai airport runway?