தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளும், ஜூன் 2ஆம் தேதி முதல் மெட்ரிக் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் முறையான அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின்னர் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. 3 ஆண்டுக்கு ஒருமுறை பள்ளிகள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். நகர்ப்புறமாக இருந்தால் 6 கிரவுண்ட் இட வசதியும், புறநகர் பகுதிகளில் செயல்படும் பள்ளியாக இருந்தால் 10 கிரவுண்ட் இட வசதியும் இருக்க வேண்டும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மாடியில் நடத்த கூடாது என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 2ஆம் தேதி மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நர்சரி பள்ளிகள் 3ஆம்தேதி, 6ஆம் தேதி என ஜூன் முதல் வாரத்திற்குள் திறக்கப்பட உள்ளது.
இதில் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி செயல்படாத 740 மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் இன்னும் தங்கள் பள்ளியின் உரிமத்தை புதுப்பிக்காமல் உள்ளதால் இவற்றுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது.
எனவே இந்த பள்ளிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுமா? 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? இதற்கு அதிகாரிகள் அனுமதி அளிப்பார்களா? அல்லது அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவராததால் அந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதா, வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘அனுமதியின்றி பள்ளி கூடங்கள் செயல்பட அனுமதிக்க மாட்டோம். அரசு விதிமுறைபடிதான் பள்ளிகளை நடத்த அனுமதிப்போம் என்று கூறியுள்ளார்.
English Summary : Will unauthorized Matriculation schools open. Parents confused.