பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கவுன்சிலிங் முன்னேற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட உள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 6ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. 1 லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகிய போதிலும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 545 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது.
மொத்தமுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதால் விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இடம் உறுதி என்பது தெளிவாகியுள்ளது. இருப்பினும் விருப்பமான கல்லூரிகளிலும், விருப்பமான பாடப்பிரிவு கிடைப்பதிலும்தான் பிரச்சினை. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மாணவர்களுக்கு வருகிற 15ஆம் தேதி ஆன்லைனில் ‘ரேண்டம் எண்’ ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து, 19ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின்னர் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த நிலையில், கவுன்சிலிங்கிறான முன்னேற்பாடுகள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கவுன்சிலிங்கிற்கு வரும் வெளியூர் மாணவ-மாணவிகளுக்கும் உடன் வருவோருக்கும் கலந்தாய்வு மையம் அருகே பெரிய ஓய்வுக் கூடமும், கல்விக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு அரங்குகளும், கலந்தாய்வுக்கு மாணவர்கள் வரிசையாகச் செல்ல வசதியாக தடுப்புப் பாதைகளும் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிப்பதற்கு 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிடும் என்பதால் இப்போதே பணியை தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் அவர்கள் கூறியுள்ளார்.
English Summary: Works for Engineering Counselling is going in busy schedule. Random Numbers for students is under processing.