கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி உலக பார்க்கின்சன் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் நேற்று முன் தினம் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நடைபயணம், கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன.
மேலும் இந்த தினத்தில் “பார்கின்சன்’ நோயாளிகளுக்கான ஒருங்கிணைந்த பராமரிப்பு மையம் ஒன்றும் தொடங்கப்பட்டது. இந்த மையத்தை தொடங்கி வைத்து பேசிய நரம்பியல் துறையின் தலைவர் டாக்டர் யு.மீனாட்சிசுந்திரம் கூறியபோது, “பார்கின்சன்’ நோய் என்பது, மூளை செயல்பாட்டுக்குத் தேவையான டோபமைன் என்ற ரசாயன அளவு சுரப்புக் குறைபாடாகும். இந்த குறைபாடு காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டு முதலில் உடலின் ஒரு பக்கம் செயல்பாடுகள் மெதுவாகக் குறையும் என்றும் இதனால் கை, கால்களில் நடுக்கம் ஏற்படும் என்று கூறிய அவர் எந்த ஒரு பொருளையும் இறுகப் பிடிக்க முடியாது. முக பாவணைகள் குறையும். வேகமாக நடக்க முடியாது. திடீரென கீழே விழும் நிலை ஏற்படும் என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பிஸியோதெரபி மருத்துவர்கள், உளவியல் மருத்துவர்கள் ஆகியோர் பார்க்கின்சன் நோயைத் தடுக்கும் முறைகள் குறித்தும் அவர்கள் பின்பற்ற வேண்டிய செயல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் சி.யு.வேல்முருகேந்திரன், மருத்துவர்கள் ஆர்.பாலகிருஷ்ணன், ஏ.ஜே.ஹேமமாலினி, பிஸியோதெரபிஸ்ட் சி.எம்.ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
English Summary : World Parkinson’s Day is held on the 11 April in Sri Ramachandra hospital porur, the day is used to promote awareness of Parkinson’s Disease.