indiaஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு லீக் ஆட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்தன. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு விளையாட தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று முதல் சூப்பர் 10 போட்டிகள் தொடங்கியது. நேற்றைய முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதியது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத நியூசிலாந்து அணி முதலில் தடுமாறி விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தாலும் பின்னர் ஆண்டர்சன் ஓரளவுக்கு சுதாரித்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்த உதவினார். அவர் 34 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் தவான் விக்கெட்டுக்கும், மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டுக்களும் வீழ்ந்தால் இந்திய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. கேப்டன் தோனி மற்றும் விராத் கோஹ்லி ஓரளவுக்கு சுதாரித்து விளையாடியபோதிலும் அடுத்தடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததால் இந்திய அணி 18.1 ஓவர்களில் வெறும் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய எம்.ஜே. சாண்ட்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய சூப்பர் 10 போட்டிகளில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றது.

English Summary: WorldCup T20: Defect the First Match in India.