வெளியூரில் இருந்து சென்னைக்கு புதியதாக வருபவர்கள் சென்னையில் வழி தெரியாமல் தவித்து வருவதும், எந்த பேருந்தில் ஏறினால் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் திகைத்து வருவதும் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. மேலும் தெரியாத நபரிடம் வழி கேட்டால் வழிப்பறி பயம் ஏற்படும் என்பதும் பலரது பயமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னைக்கு வரும் வெளியூர் பயணிகளின் இந்த பயத்தை போக்கும் வகையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக தகவல்களை பெற்று, பயணிகளை குழுக்களாக இணைக்கும் வகையில், ‘ஐகம்யூட்’ செயலியை அரவிந்த், திலிப் குமார், ரேவந்த், ரக் ஷித், ஆனந்த்குமார் ஆகிய ஐந்து இளைஞர்கள்.உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அதன் வழித்தடங்கள், புறப்படும் இடம், சேரும் இடம், இடைப்பட்ட நிறுத்தங்கள், நேரம், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றை நாங்கள் பெற்று, ஒருங்கிணைந்த பயணிகள் பயன்பெறும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செயலியை உருவாக்கி உள்ளோம்.
குறிப்பிட்ட இடத்தில், பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஒருவர், இந்த செயலியின் உதவியுடன், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தையும், அங்கு வரும் பேருந்து வழித்தடங்களையும், நேரத்தையும் அறிந்து கொள்ள முடியும். புறப்படும் இடத்தையும் சேரும் இடத்தையும் பதிவிட்டால், எந்தெந்த பேருந்துகளில் ஏறி பயணிக்க வேண்டும், ஒரே பேருந்தா? தொடர் பேருந்தா என்ற விவரங்களையும் அது தந்து விடும். அதேபோல், குறிப்பிட்ட பேருந்தில் ஏறிய ஒருவர், தாம் ஏறிவிட்டதாக பதிவிட்டால், அதே வழித்தடத்தில், அதே பேருந்துக்காக காத்திருக்கும் அனைவருக்கும் அந்த தகவல்கள் சென்று விடும்.
மாற்றுவழிப் பாதையில் பேருந்து இயக்கப்பட்டாலோ, வேறு ஏதேனும் காரணங்களால், சாலையில் பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலோ, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலோ, அந்த தகவல்களை பதிவிட்டால், அது மற்றவர்களுக்கான எச்சரிக்கையாகவும், வழிகாட்டுதலாகவும் செயலி தகவலை கொண்டு சேர்க்கும். போக்குவரத்து நெரிசல், தாம் வழக்கமாகச் செல்ல வேண்டிய பேருந்துக்கான நேரம் நெருங்குவது உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தியாக வரும்.
இந்த செயலியை, ‘ஆன்லைனில்’ தொடர் தகவல் பரிமாற்றத்திற்கும், ‘ஆப்லைனில்’ அடிப்படை தகவல்களை அறியவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாங்கள் கடந்த ஆண்டு தான், இந்த, ‘ஐகம்யூட்’ செயலியை உருவாக்கினோம். தற்போது, ஆயிரக்கணக்கான பயணிகள் செயலியை பயன்படுத்துகின்றனர். தற்போது, சிற்றுந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகளையும் இணைக்கும் பணியில் இறங்கி உள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் அவையும் பயன்பாட்டுக்கு வரும்.
பயணிகள் தங்களுக்கான வழித்தடங்களை சேமிப்பதன் மூலம், அவர்களுக்கான தொடர் அறிவுறுத்தல்கள், நினைவூட்டல்களாக வந்து சேரும். சென்னையில் கடந்த ஆண்டு நவ., டிச.,ல் பெய்த பெருமழை வெள்ளத்தின் போது, இந்த செயலி, அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டு, அனைவருக்குமானதாக உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த ஐந்து இளைஞர்கள் கூறியுள்ளனர்.
English summary:You’re New to Chennai? Here’s your guide to a Application