சேலம்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் கன மழை பெய்தது.

இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் மழை குறைந்ததால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

கபினி அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டம் 117 அடியானது.

இந்த நிலையில் கேரளாவில் வயநாடு மற்றும் கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை அந்த அணைக்கு 37 ஆயிரத்து 456 கன அடி தண்ணீர் வந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 83.66 அடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 50 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 4 ஆயிரத்து 550 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 54 ஆயிரத்து 550 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் இன்று இரவு ஒகேனக்கலை கடந்து மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடகு மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 9 ஆயிரத்து 898 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 8 ஆயிரத்து 311 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து நேற்று 18 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 19 ஆயிரத்து 341 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையில் இருந்து தண்ணீர் திறப்பை விட அணைக்கு குறைவாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 118.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 117.5 அடியாக இருந்தது.

இனி வரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *