ஆயுத பூஜை, விஜய தசமி ஆகிய தொடர் விடுமுறை நாள்களையொட்டி பணிபுரிவோர், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சென்னையிலிருந்து 770 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது: வியாழக்கிழமை ஆயுத பூஜையும், வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படவுள்ளன.
பூஜை பண்டிகையையொட்டி 2 நாள்கள் அரசு விடுமுறை, மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 விடுமுறை நாள்களும் வருகின்றன. இதனால் ஏராளமானோர் இந்த விடுமுறை நாள்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு பேருந்து, ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பேருந்து போக்குவரத்தில், சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து வழக்கமாக 2,200 பேருந்துகள் இயக்கப்படுவதோடு, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு கூடுதலாக 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் புதன், வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் இயக்கப்படும்.
இந்த விடுமுறைக்கு வெளியூர்களுக்குச் செல்ல இதுவரை 12,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சொகுசு, படுக்கை வசதி, குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி, கழிவறையுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், விடுமுறை முடிந்ததும் பணியிடங்களுக்கும், சென்னைக்கும் திரும்பும் பொதுமக்களுக்காக ஞாயிற்றுக்கிழமையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
50 மாநகர இணைப்புப் பேருந்துகள்: இதனிடையே சென்னை மாநகரிலிருந்து கோயம்பேடுக்கு மக்கள் செல்ல ஏதுவாக பல்வேறு பகுதிகளில் இருந்து 50 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளும் இரு தினங்களுக்கு இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.