கார்த்திகை நட்சத்திரத்தன்று முருக பக்தர் விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, பசுக்கள், நிலபுலம், நிம்மதியான வாழ்வு ஆகிய எல்லாம் கிடைக்கும். இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும்பேற்றினையும் இறுதியில் முக்தியையும் பெறலாம்.
கார்த்திகை விரத வழிபாட்டு முறைகள்:
கார்த்திகை விரதமுறையானது கார்த்திகை மாதம் வரும் திருகார்த்திகை தினம் முதல் மேற்கொள்ளப்பட்டு பின் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரத முறையினை மேற்கொண்டு வழிபட்டால் வாழ்வின் உன்னத நிலையை அடையலாம். இம்முறையில் கார்த்திகை நட்சத்திரமானது மாலை ஐந்து மணி மேல் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
விரதம் இருப்பது எப்படி?
திருக்கார்த்திகை தினத்தில் விரதமுறையை மேற்கொள்வோர் கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணியன்று பகலில் உண்டு இரவில் உண்ணாது இருக்க வேண்டும். கார்த்திகை அன்று காலையில் நீராடி முருகன் கோயில் சென்று வழிபடவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருகனின் அருட்பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். முழு தினமும் முருகனை தியானம் செய்ய வேண்டும். மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி நித்திய வழிபாடு செய்து, அன்னதானத்திற்கு பிறகு அமுது செய்ய வேண்டும். (அசைவ உணவு, பூண்டு, வெங்காயம் தவிர்க்கவேண்டும்). பிறகு ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகையன்று விரதம் மேற்கொள்ள வேண்டும்.