மும்பைக்கு அடுத்தபடியாக வீட்டு வாடகை மிகவும் அதிகரிக்கும் நகரமாக சென்னை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் வீட்டு வாடகை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது

சென்னை 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 4.68 மில்லியனாக இருந்த சென்னையின் மக்கள் தொகை தற்போது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக பெருகி 10.71 மில்லியனை கடந்துள்ளது. இதில் 96 சதவிகிதம் பேர் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை குறைவாவே இருக்கிறது. அதனால் வீடுகளின் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வீட்டின் வாடகையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் வீட்டு வாடகை சுமார் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக நோ புரோக்கர் ( NO BROKER) இணைய தளம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சென்னையின் மைய பகுதிகளில் வீட்டின் வாடகை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. உதாரணமாக சென்னை முக்கிய மைய பகுதிகளான நுங்கம்பாக்கம், அடையார், வேளச்சேரி, அண்ணா நகர் பகுதிகளில் 10 ஆண்டுகள் முன்பு‌ ஒரு படுக்கை அறைக் கொண்ட வீட்டுக்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாயாக இருந்த வீட்டு வாடகை தற்போது 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் புறநகர் பகுதிகளிலும் வீட்டின் வாடகை கணிசமாக உயர்ந்தே காணப்படுகிறது. வண்டலூர், தாம்பரம், பெருங்களத்தூர், செங்குன்றம், ரெட்டேரி ஆகிய பகுதிகளிலும் 10 ஆண்டுகளில் வாடகை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 முதல் 20 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது. எங்களின் மாத வருமானத்தில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வீட்டின் வாடகைக்கே செலவிடும் நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். வீடு மற்றும் வீட்டு மனைகளை வாங்க அரசின் சட்ட நிர்ணயம் இருப்பதுபோல், வாடகையை நிர்ணயம் செய்ய வரையறை கொண்டு வருவதே இதற்கு தீர்வு எனவும் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *