இதுபற்றி சங்கத் தலைவர் பெ. மயிலவேலன், பொதுச் செயலர் அ. கந்தசாமி, பொருளாளர் மோ. பாட்டழகன் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:
பதிப்புத் துறையிலுள்ள பத்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு முதல்வர் பழனிசாமி உதவ வேண்டும் என்று இந்தியப் படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றுப் பிரச்சினையால் தற்பொழுது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகப் புத்தகப் பதிப்புத் துறை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. இந்த எதிர்பாராத பேரிடர் காரணமாக பதிப்புத் துறையில் வாழ்வதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
பல ஆண்டுகளாக உள்ளாட்சித் துறையில் இருந்து சுமார் ரூ. 250 கோடி நூலகத் துறைக்கு வரவேண்டியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிகளில் 10 சதவிகிதம் நூலக வரி பெறப்படுகின்றது. இந்த வரி பொது நூலகத் துறைக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொதுநூலகத் துறையால் வாங்கப்பட்ட நூல்களுக்கான தொகை இன்னமும்கூட வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பதிப்பகத் துறைச் சேர்ந்த டி.டி.பி., பிரிண்டிங், பைண்டிங், பிளேட் மேக்கிங், நெகட்டிவ் மேக்கிங், லேமினேஷன் என பல்வேறு தொழில்களையும் சார்ந்த 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் முடங்கியுள்ள பதிப்பாளர்களின் வாழ்வாதாரத்தைத் கருத்தில்கொண்டு உள்ளாட்சி வழங்க வேண்டிய நிதியை ஒரே தவணையாக பொது நூலகத் துறைக்கு வழங்கி பதிப்பாளர்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையைத் தமிழக அரசு வழங்க வேண்டும்.