சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் இருப்பதாக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறிய நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலி வாக்காளர்களை கண்டுபிடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 1.85 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடைய பெயர்களை நீக்கியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 போலி வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக பெயர் நீக்கம் பட்டியல் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான சந்திரமோகன் தலைமை வகித்தார்.

இதில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து இடம் மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள், இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் வசிக்காதவர்கள் ஆகியோரின் பெயர்களை பட்டியலில் நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, பெயர் நீக்கம் செய்யப்படும் விவரங்கள் கொண்ட பட்டியல் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. அந்த பட்டியலின் விபரங்கள் பின்வருமாறு:

வாக்காளர் பட்டியலில் இடம் பெயர்ந்தவர்கள் 54,317
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் 1,10,717
இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தவர்கள் 14,131
வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் வசிக்காதவர்கள் 6,004
ஆக மொத்தம் 1,85,169 போலி வாக்க்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடைய பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

English Summary: 1.85 fake voters were removed from Voters List in Chennai District, State Election Commission.