கடந்த 2004-2015ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக சென்னை வருமானவரி அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் சென்னையில் சுமார் 12 ஆயிரம் பேர் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்பட பலர் இந்த சிறப்பு கவுண்டர்களில் தங்கள் வருமான வரியை செலுத்தியுள்ளனர்.

சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் முதல் சிறப்புக் கவுன்ட்டர்கள் தொடங்கப்பட்டன. சென்னை மக்களுக்கு 30 கவுன்ட்டர்கள், காஞ்சிபுரம் மக்களுக்கு 4 கவுன்ட்டர்கள் என மொத்தம் 34 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. தாம்பரம் பகுதிக்குட்பட்டு வருமான வரி செலுத்துவோர், தாம்பரம் வருமான வரி அலுவலகத்தில்தான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை ஏற்கனவேஅறிவித்திருந்தது.

சிறப்பு கவுன்ட்டர்களில் இந்த ஆண்டு ஐந்து நாள்களில் சென்னையில் மட்டும் இதுவரை 12,000 பேர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் ஜூலை வரை, சிறப்பு கவுன்ட்டர்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 75,503 பேர் வருமான வரித் தாக்கல் செய்தததாகவும் இவற்றில் சென்னையில் 35,184 பேரும், மற்ற பகுதிகளில் 39,562 பேரும் அடங்குவர் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிகழாண்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளோர் கட்டாயம் இணையதளம் வாயிலாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு காரணமாகவே விண்ணப்பம் வாயிலாக தாக்கல் செய்யும் எண்ணிக்கை குறைவுக்கு முக்கியக் காரணமாகும் என வருமானவரி அலுவலகம் தெரிவித்தது. கடந்த நிதியாண்டு, ரூ. 5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் உள்ளோர், வருமான வரிப் பிடித்தத் தொகையை (டிடிஎஸ்) திரும்பக் கோராதோர் மட்டுமே, இந்தச் சிறப்பு கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான கடைசி நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் தாக்கல் செய்தனர். சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில் செயல்பட்ட சிறப்புக் கவுன்ட்டர், இணையதளம் ஆகியவற்றில் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தோர் விவரம் ஓரிரு நாள்களுக்குப் பின்னரே தெரியவரும் என்றும் வருமான வரி அலுவலகம் தெரிவித்தது.

English Summary : 12 thousand people filing tax in special counters in Chennai.