சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் நேற்று முன் தினம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் சென்னை நகரில் நிறைவேற்றப்படவுள்ள பல்வேறு பணிகள் தொடர்பாக 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் சில முக்கிய தீர்மானங்களை இங்கு பார்ப்போம்

1. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பழைய மார்க்கெட் கட்டடங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய மார்க்கெட் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிக்கான மதிப்பீட்டுக்கு மாமன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது சைதாப்பேட்டை 142-ஆவது வார்டில் மார்க்கெட் கட்டடங்கள் உள்ளன. இந்தப் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று கடந்த 2013-14 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய வணிக வளாகம் கட்டும் பணிக்கு சுமார் ரூ. 9 கோடியே 5 லட்சம் ஆகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் புதிய வடிவமைப்பின்படி, தரைத்தளம், 2 தளங்கள் கொண்ட வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிக்கு ரூ. 20 கோடியே 96 லட்சம் ஆகும் என புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறவும், ஹட்கோ போன்ற நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற அரசின் அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. சென்னை வளசரவாக்கம், 151-ஆவது வார்டில் 100 படுக்கை வசதியுடன் கூடிய சமுதாய நல மையம் கட்ட சுமார் ரூ. 7 கோடியே 95 லட்சம் ஆகும் என்ற மதிப்பீட்டு அனுமதியளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர, பல்வேறு கட்டடங்கள் கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, மன்றக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

3. வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிக்கு உதவும் வகையில் பேட்டரியினால் இயங்கும் 400 மூன்று சக்கர சைக்கிள்களை கொள்முதல் செய்ய மாமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

4. மாநகராட்சியின் மூன்று வட்டாரங்களில் பயன்படுத்த 1,100 லிட்டர் கொள்ளவுடைய 1,600 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகளையும் 660 லிட்டர் கொள்ளவு கொண்ட 6,200 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகளைக் கொள்முதல் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள பிரதானக் கட்டடம், புதிய இணைப்புக் கட்டடம் ஆகியவற்றைத் தவிர்த்து, பிற கட்டடங்களை இடிக்கவும், அங்கு மென்மையான இயற்கை நிலக்காட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டுக்கு மன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

6. புதிய சாலைகள், எல்.இ.டி. விளக்குகள் அமைத்து, பல்வேறு நபர்களிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட நிலங்களை கைவசப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7. மாநகராட்சிக் கட்டடங்களில் கூடுதலாக இ-சேவை மையங்கள் அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8. அம்மா உணவகங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக சென்னை மாநகராட்சிக்கு சிறந்த ஆளுமை விருதை வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9. சென்னை மாநகராட்சியின் 32 பள்ளிகளில் “டீச் ஃபார் இந்தியா’ அமைப்பு மூலம் வகுப்புகள் நடத்த ரூ. 99 லட்சம் ஒதுக்கீடு.

10. 10ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுண்டல் வழங்க சுமார் ரூ. ஒரு கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு.
11. 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மாணவர்களின் பயன்பாட்டுக்கு நடமாடும் அறிவியல் ஆய்வகம் செயல்படுத்தி, அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்க ரூ. 67.17 லட்சம் ஒதுக்கீடு.
12. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் துருப்பிடிக்காத எஃகு கைப்பிடிகள் அமைக்கும் பணியை “ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’ நிறுவனத்துக்கு வழங்குதல்.
13. மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் சாராப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஒப்பம் கோருதல்.
14. கோட்டூர்புரம் கெனால் பேங்க் சாலையில் மீன் அங்காடியை ரூ. 7.92 கோடியில் கட்டுதல்..

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட மொத்தம் 76 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டது.

English Summary : Chennai Corporation executed 76 new resolutions