தமிழர்களின் முக்கியமான திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்கள் ஆகியவற்றில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் பொதுமக்கள் தற்போது பேருந்துகள் பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். பொதுமக்களின் பயண வசதிக்காக 12,624 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் பொங்கல் பண்டிகையின் போது கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன.
இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 9.1.2016 அன்று 482 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 504 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 365 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 539 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 1,345 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 1,447 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 4,682 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இது தவிர மாநிலத்தின் மற்ற முக்கிய ஊர்களிலிருந்து 9.1.2016 அன்று 516 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 608 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 621 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 892 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 2,080 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 3,225 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 7,942 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி, 9.1.2016 முதல் 14.1.2016 வரை 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 15.1.2016 முதல் 19.1.2016 வரை இயக்கப்படும்.
இதேபோல் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். காணும் பொங்கல் நாளான 17.1.2016 அன்று மெரினா கடற்கரை, வண்டலூர், மகாபலிபுரம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிப்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary: 12,634 Special Buses for Pongal Festival. CM Order.