தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் ரயில்களில் இன்னும் ஒரு ஆண்டிற்குள் 17ஆயிரம் சாதாரண கழிவறைகள் பயோ கழிவறைகளாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே. அகர்வால் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் தெற்கு ரயில்வே உடனான வணிக வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே அகர்வால், சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய அசோக் கே.அகர்வால், “உலகிலேயே பெரிய நிறுவனமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கடந்த 1853-ஆம் ஆண்டு மும்பையில் இருந்து தானேவுக்கு இந்தியாவின் முதல் ரயில் இயக்கப்பட்டதில் இருந்து நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே துறை பெரும் பங்காற்றி வருகிறது. இந்திய ரயில்வே துறை நாட்டின் ஒருமைப்பாட்டின் குறியீடாக விளங்குறது.
மேலும், தற்போது இந்திய ரயில்வே துறையில் பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் 5 ஆண்டுகளில் ரயில்வேயை பாதுகாப்பு நிறைந்த போக்குவரத்து அமைப்பாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையை நவீனமாக்கி, விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களில் இருந்த 17 ஆயிரம் சாதாரண கழிவறைகள் பயோ கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் மேலும் 17 ஆயிரம் கழிவறைகள் பயோ கழிவறைகளாக மாற்றப்படும்’ இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு குழுத் தலைவர் எஸ்.என். ஐசன்ஹோவர், சென்னை மண்டலக் குழுவின் துணைத் தலைவர் எம். பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary : Southern Railway informs over 17 thousand bathrooms will be converted into Bio Bathrooms in a year.