தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் புதியதாக தொழில் தொடங்க உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் சீனாவை சேர்ந்த இரண்டு செல்போன் தொழிற்சாலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கம்ப்யூட்டர்கள் உள்பட பல மின்னணு பாகங்கள் தயாரிக்கும் சீனாவை சேர்ந்த நிறுவனமான ‘லெனோவா’ என்ற நிறுவனம் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட் போன்கள்’ தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதற்காக ‘பிளெக்ஸ்ட்ரானிக்ஸ்’ என்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் லெனோவா செல்போன் நிறுவனத்திற்கு ‘பிளெக்ட்ரானிஸ்’ நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு 60 லட்சம் அதிநவீன ‘லெனோவா’ மற்றும் ‘மோட்டோரோலோ’ செல்போன்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செல்போன் பாகங்கள் பல்வேறு பரிணாமங்களில் தொடர்ச்சியாக பொருத்தப்படும் (உற்பத்தி கோடுகள்) பணி, பொருட்களின் தர உத்தரவாதம் மற்றும் பொருட்களின் தரச்சோதனை செய்தல் உள்ளிட்ட வசதிகள் தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெறும். ஒரே சமயத்தில் இந்த நிறுவனத்தில் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்யும் வகையில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது.
‘லெனோவா’ மற்றும் ‘மோட்டோரோலோ’ ஆகிய 2 செல்போன் தொழிற்சாலைகளும் தனித்தனி உற்பத்தி கோடுகளுடன் ஒரே மாதிரியான வசதிகளை பெற்றிருக்கும். 2 தொழிற்சாலைகளும் உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலி தொடர்பான செயல்பாடுகளை இணைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து ‘லெனோவா’ நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில், எங்களுடைய தயாரிப்புகளின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய நாங்கள் ஊக்குவிக்கப்பட்டதற்கு காரணம். ‘லெனோவா’ தொழிற்சாலை அமைய இருப்பது எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நீண்டகால அர்ப்பணிப்பாக அமையும். உலகம் முழுவதும் உள்ள எங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவின் திறமைகள், ஆற்றல் மூலமாக அதிநவீன தொழில்நுட்ப வசதி உடைய பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்” என்றனர்.
English Summary : Lenovo and Motorola cellphone companies signed to open near Sriperumbudur, Chennai.