கோவையில் இருந்து டில்லி செல்லும் விரைவு ரயில் மற்றும் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் விரைவு ரயில் ஆகிய இரண்டு ரயில்களிலும் அதிகளவிலான வெயிட்டிங் லிஸ்ட்டில் பயணிகள் காத்திருப்பதால், இந்த இரண்டு ரயில்களிலும் நிரந்தரமாக கூடுதல் பேட்டி ஒன்றை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 12647/ 12648: கோவை – ஹஸ்ரத் நிஜாமுதீன் – கோவை இடையிலான கொங்கு வாராந்திர விரைவு ரயிலில் மே 31-ஆம் தேதி முதல் 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைக்கப்படும்.

அதேபோல் ரயில் எண் 12682/ 12681: கோவை – சென்னை சென்ட்ரல் – கோவை வாராந்திர விரைவு ரயிலில் மே 29-ஆம் தேதி முதல் கூடுதலாக 2-ஆம் வகுப்பு பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைக்கப்படும்.

இந்த இரண்டு ரயில்களிலும் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் கூட்ட நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Southern Railway announced to add 2 extra boxes permanently for 2 Coimbatore trains number 12682/12681.