கடந்த ஜூலை மாதம் சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக ஆலந்தூரில் இருந்து சின்னமலை இடையே இந்த ஆண்டு நவம்பர் மாதம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சென்ட்ரல் – பரங்கிமலை மற்றும் விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் செயல்படுத்த திட்டமிட்டு அதற்காக ரூ.14 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட மேம்பாலம், சுரங்கப்பாதை என 2 வழித்தட முறையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக, சுரங்கப்பாதை பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் ரெயில் நிலைய பணிகள் 62 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேம்பால பணியும் 80 சதவீதம் முடிந்துள்ளது.
தற்போது, 2-வது வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக, ஆலந்தூர் – பரங்கிமலை இடையே நவம்பர் மாதம் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. அதே காலக்கட்டத்தில், முதல் வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் – சின்னமலை இடையேயும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களிலும் வரும் செப்டம்பர் இறுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கான இறுதி கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு முதல் எழும்பூர் வரை சுரங்கப்பாதையில் 21016ஆம் ஆண்டு மார்ச் மாதம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. முன்னதாக நவம்பர் மாதம் கோயம்பேடு – செனாய்நகர் இடையே முதற்கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அந்தப் பகுதியில் தண்டவாளம், சிக்னல்கள் அனைத்தும் அமைக்கப்பட்டுவிட்டன. மேலும், செனாய்நகர் – எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் தண்டவாளம், சிக்னல்கள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் இந்தப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
மெட்ரோ ரெயில் திட்ட 2 வழித்தடங்களும் ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய் இடங்களில் ஒன்றையொன்று ஒன்று சேர்கின்றன.2 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைகின்றன.
அதிலும், சென்டிரல் முக்கியமான பகுதி என்பதால், அங்கு பூமிக்கு அடியில் அமையும் 2 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் ரூ.400 கோடி செலவில் நவீன வாகன நிறுத்தும் வசதியுடன், பெரிய வணிக வளாகத்துடன் அமைக்கப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில், சென்னையில் பிரபலமான பொருட்கள் அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் 1000 அடி நீளத்தில், 100 அடி அகலத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
அண்ணா சாலையில் சுரங்கப்பாதை பணியை மேற்கொண்டு வந்த ரஷ்ய நிறுவனம் அந்தப் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டது. தற்போது, ஏப்கேன் என்ற இந்திய நிறுவனமும், டி.டி.எஸ். என்ற ரஷ்ய நிறுவனமும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் எழும்பூர் – வண்ணாரப்பேட்டை இடையே நடைபெறும் சுரங்கப்பணியை மேற்கொள்ள உள்ளது.
மொத்தத்தில் அனைத்து பணிகளும் 2017-ம் ஆண்டு முடிக்கப்பட்டு முழு வீச்சில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது.
English Summary : Alandur to Parangi Malai and Chennai Airport to Chinna Malai metro train routes will be opened in November.